ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தின் வீடியோ இணையத்தில் கசிந்த நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் “இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “ஒரு ரெக்கார்டிங் வீடியோவால் பலரின் 2 மாத உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த திரை அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்தப் படத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக இன்று இப்படத்தில் நாகர்ஜுனா இடம்பெற்றுள்ள காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், லோகேஷ் கனகராஜ் இந்த பதிவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.