ரணில் தப்பவே முடியாது! எல்லா வழிகளிலும் விசாரணை முன்னெடுப்பு!!

‘தென்னாபிரிக்காவில் உண்மை ஆணைக்குழு செய்ததுபோல இலங்கையிலும் பிரதான கொலையாளிகளுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.” – என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

உலகில் உள்ள சிறந்த அதிகாரிகளை கொண்டுவந்தாவது , ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படக்கூடிய அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு, தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

‘திருகோணமலை பகுதியில் சில சிங்கள மக்கள் தமிழர்களை தாக்கி கொலை செய்துள்ளனர். சில தமிழர்கள் சிங்கள மக்களை கொலை செய்துள்ளனர். வழக்கு மூலமா இப்பிரச்சினையை தீர்க்க முடியுமா? இல்லை. எனவே, முழுமையானதொரு நல்லிணக்கம் ஊடாக இப்படியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம்.

பட்டலந்த வதை முகாம் சித்திரவதைகள் தொடர்பில் துளி அளவும் கவலைப்படாத இவர்கள், பெயர், ஊர் விபரம் தெரியாத – உறவினர்களும் அல்லாத நந்திக்கடல், தர்மப்புரம் மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு எப்படி நீதியை வழங்குவார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினை இன்னும் மூன்று, நான்கு ஆண்டுகளில் தீர்ந்துவிடும். போர் உள்ளிட்ட காரணங்களால் கடந்த காலங்களில் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுவதற்கு தீவிரமாக செயல்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம்.

காணாமல்போனோர் பிரச்சினையென்பது வேதனை தரக்கூடிய பிரச்சினையாகும். உயிரிழப்பால் ஏற்படும் வலியைவிட காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை பாரதூரமாகும். உயிரிழந்தவரின் சடலத்தை கண்டுவிட்டால் என்றாவது கவலை தீரக்கூடும். ஆனால் ஒருவர் காணாமல் போனால், மீண்டும் வருவார் என காத்திருந்து, காத்திருந்து நாள்தோறும் கவலைப்பட வேண்டும்.” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நல்லிணக்கம்தான் எமது பிரதான வழியாக உள்ளது. வடக்கிலும், தெற்கிலும் செய்த பாவங்களால்தான் ஐக்கிய தேசியக் கட்சி இன்று காணாமல்போயுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி என புதிய பெயரில் வந்திருந்தாலும் கூட அக்கட்சிக்கு வளர்ச்சி என்பது இல்லை.

பட்டலந்த விடயம் தொடர்பில் மட்டுமா பேசப்படும், இரு பக்கங்களிலும் வடக்கில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் கதைக்கப்படமாட்டாதா என வடக்கு மக்கள் கேட்கின்றனர்.
நல்லிணக்கத்துக்கான பாரிய வேலைத்திட்டங்கள் இவ்வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும்.

அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக புதிய அரசமைப்பு இயற்றப்படும். இலங்கையில் தவறுகள் நடந்துள்ளன என்பதை நாம் ஏற்கவேண்டும். அதற்காக பாதிக்கப்பட்ட தரப்புகளிடம் மன்னிப்பு கோர வேண்டும். மீள் நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles