ரஸ்யாவில் ராணுவ போக்குவரத்து விமானம் விபத்து: 19 பேர் பலி!

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் இராணுவப் போக்குவரத்து விமானமொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 19 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய ஊடகமான இஸ்வெஸ்டியா (Izvestia) செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரியாவில் அமைந்துள்ள கெமரோவோ (Kemerovo) பிராந்தியத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

An-12 ரக இராணுவப் போக்குவரத்து விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெமரோவோ பிராந்திய ஆளுநர் இல்யா செரெடியுக், யாகுனோவோ (Yagunovo) கிராமத்திற்கு அருகில் விமான விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாகத் தனது உத்தியோகபூர்வ தகவல் பரிமாற்றத் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விபத்துக்குள்ளான விமானத்தின் வகை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான மேலதிக விபரங்களை அவர் ஆரம்பத்தில் வெளியிடவில்லை.

விபத்து இடம்பெற்றதற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் ஏனைய விபரங்கள் தொடர்பில் உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் அவசரகால மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான ஆரம்பகட்ட சந்தேகக் காரணம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles