சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக 60 குற்றச்சாட்டுகளுடன் மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் வரவு – செலவுத் திட்டக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், எதிர்வரும் ஜனவரி மாத அமர்வின்போது குறித்த பிரேரணையை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு எதிராக 50 குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி கடந்த ஒக்டோபர் மாதம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளித்திருந்தது.
எனினும், நீதிமன்ற வழக்கு விசாரணைகளுடன் தொடர்புடைய சில விடயங்கள் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டிருந்ததால், அந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள ஆளுங்கட்சி மறுப்புத் தெரிவித்தது. அத்துடன், திருத்தங்களை மேற்கொண்டு பிரேரணையை மீண்டும் முன்வைக்குமாறும் வலியுறுத்தியது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, சபாநாயகருக்கு எதிராக மேலும் 60 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய புதிய நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
குறித்த 60 குற்றச்சாட்டுகளையும் சட்டரீதியாக முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் குழுவொன்றையும் ஐக்கிய மக்கள் சக்தி நியமிக்கவுள்ளது.
