பதுளை கல்வி வலயத்தில் பாரதி மகா வித்தியாலயத்தின் மாணவன் செல்வன்.எஸ். திலீப்ஷான் மதுபோதையில் வாகனம் செலுத்துவதைக் கண்டறியும் புதிய நெக்ஸா (NEXA) தொழில்நுட்பக் கருவியை கண்டுபிடித்து தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுச் சாதனைப் படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் சொ. திருச்செல்வம் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
2026ஆம் ஆண்டுக்கான வணிக மற்றும் முயற்சியாண்மைத் திறன் மதிப்பீட்டுப் போட்டியில் பங்கேற்ற தரம் 13 வர்த்தகப் பிரிவு மாணவன் எஸ். திலீப்ஷான் வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாரதிகளின் சுவாசத்திலுள்ள மதுசார அளவைக் கண்டறிந்து உடனடியாக என்ரொய்ட் (Android )செயலி மூலம் எச்சரிக்கை விடுக்கக்கூடிய ‘நெக்ஸா’ (NEXA) எனும் நவீன கட்டமைப்பை அவர் வடிவமைத்துள்ளதுடன் இக்கருவி இணைய இணைப்பு அல்லது சிம் அட்டை இன்றியே Wi-Fi தொழில்நுட்பத்தில் இயங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
இக்கருவியை குறுஞ்செய்தி ஊடாகவும் எச்சரிக்கை விடுக்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்குரிய வழிகாட்டல் ஆலோசனகளை அம் மாணவனுக்கு வழங்கவும் நாம் ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.
தேசிய மட்டத்தில் வெற்றி பெற்று நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமர சூரிய விருது பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவன் எஸ். திலீப்ஷானுக்கும் வழிகாட்டிய ஆசிரியை திருமதி எஸ். அபிராமிக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதாக மேலும் குறிப்பிட்டார்.
பசறை நிருபர்










