ராகலை, மல்லிகைப்பூ தோட்டப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில், அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்வதற்கு வெளியாட்களால் முயற்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிதொரு பகுதியில் இருந்து வேன், ஆட்டோக்களில் வந்த நபர்கள் இவ்வாறு சிலை வைக்க முற்படுவதை அவதானித்த மக்கள், அவ்வாறு செய்ய வேண்டாம் என வந்தவர்களிடம் கூறியுள்ளதுடன், ராகலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து, அங்கு ஆக்கிரமிப்பான முறையில் சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அம்மன் வழிபாடு மற்றும் காவல் தெய்வ வழிபாடு இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், அப்பகுதி மக்களின் அனுமதியின்றி இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் குறித்த இடத்தில் சிலையொன்றை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டில் இன மற்றும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குரிய முயற்சிகள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில், இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது ஏற்புடையவை அல்ல, அவை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.










