வடக்கில் இருந்து ஜனாதிபதியொருவரை உருவாக்குவதே எனது இலக்கு – நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வடக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வென்றெடுப்பது எனது இலக்காக இருக்கின்றது, அவர் ஜனாதிபதிபதவிவரை செல்ல வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் – என்று மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

பொலிஸ், காணி அதிகாரங்களை நாம் எதிர்ப்பதால்தான் வடக்கில் உள்ள சில கட்சிகளால் எங்களுடன் இணைந்து செயற்படமுடியாதுள்ளது. ஆனால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மாற்றம் வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு பகிரப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். வடக்கில் ஒன்றையும், தெற்கில் வேறொன்றையும் நாம் கூறவில்லை. எமது கட்சியின் இந்த நிலைப்பாட்டால் வடக்கில் உள்ள சில கட்சிகளால் எம்முடன் இணைந்து செயற்படமுடியாத சூழ்நிலை உள்ளது.

ஆனால் கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்களில் நம்பிக்கைகொண்ட இளைஞர்கள் வடக்கில் உருவாகியுள்ளனர். நவீன உலகம் பற்றி அவர்கள் சிந்திக்கின்றனர். அவர்கள் எமது கட்சியுடன் நேரடியாக இணைகின்றனர்.நாம் தெற்கில் உள்ள தேசிய அரசியல் கட்சி, மக்கள் அரசியலுக்கே முன்னுரிமை வழங்குகின்றோம். எம்மிடம் டீல் அரசியல் கிடையாது.

இன்னும் சில வருடங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் வடக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாக வேண்டும் என்பது எனது இலக்காக இருக்கின்றது. அவர் அமைச்சரவைக்கு வருவார், ஒருநாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளுக்குகூட செல்வார். இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கபோவதில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles