விஜய்யின் ‘பிகில்’ படத்தை காண்பித்து சிறுவனுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள்

சைக்கிளில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்த சிறுவனுக்கு, ‘பிகில்’ படத்தை காண்பித்து வைத்தியர்கள் சிகிச்சை அளித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிறுவன், தனது மாமா அரவிந்த் என்பவருடன் சைக்கிள் சென்றபோது கீழே விழுந்துள்ளான். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவனை ராயப்பேட்டை அரசு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க வைத்தியர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் ஊசி போடுவதற்காக வைத்தியர்கள் முயன்றனர். ஆனால் சிறுவன் பயத்தில், ‘ஊசி வேண்டாம்’ என அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. எவ்வளவோ முயன்றும், சிறுவன் சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால், வைத்தியர்கள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்தனர்.

அப்போது அங்கு இரவு பணியில் இருந்த ஜின்னா என்பவர், சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து, ‘உனக்கு என்ன பிடிக்கும்? என கேட்டார்’. அதற்கு சிறுவன், தனக்கு நடிகர் விஜய்யை மிகவும் பிடிக்கும் என்று வலியில் அழுது கொண்டே கூறியுள்ளான்.

மேலும் நடிகர் விஜய்யின் படங்கள், பாடல்கள், வசனங்கள் எல்லாம் தனக்கு மனப்பாடமாக தெரியும் எனவும், காயம் ஏற்பட்ட வலி, வேதனையிலும், நடிகர் விஜய்யை பற்றி சலிக்காமல் பதில் அளித்து கொண்டே இருந்தான்.

அப்போது, ஜின்னா, தனது செல்போனில் வைத்திருந்த விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார். அதை சிறுவன் வாங்கிக்கொண்டு, உற்சாக மிகுதியில், தலையில் ரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தி், தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.

விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு, விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு காண்பித்து வைத்தியர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் ருசிகரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Paid Ad
Previous articleகாதலனுடன் ஓடிய பெண்ணை இழுத்துவந்து ஆணவக்கொலை செய்த குடும்பம்!
Next articleநிதி அமைச்சரானார் பஸில் – மஹிந்தவுக்கும் புதிய பதவி!