‘வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரை’

கொவிட் தொற்றுநோய் காரணமாக பதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களை மீண்டும் இந்நாட்டிற்கு அழைத்துவர வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தற்போதைய நிலைமையை ஆராயும் விசேட கணக்காய்வு அறிக்கையை விசாரணை செய்வதற்கு கோப் குழு  அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கூடிய போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டு பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சேகரித்துள்ள 14 பில்லியன் ரூபாய் பெறுமதியான அசையும் சொத்துக்களை பயன்படுத்தி மீண்டும் இந்நாட்டிற்கு அழைத்துவருவதில் சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது தொடர்பில் குழு விசாரணை செய்தது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு பணியாளர்களை இந்த நிதியத்தை பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர எந்த தடையும் இல்லை என பணியகத்தின் தலைவர் இதன்போது வெளிப்படுத்தினார்.

மத்திய கிழக்கில் எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக தொழிலை இழந்த 34,721 பணியாளர்கள் தங்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாட்டை மீண்டும் திறப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுவரும் நிலையிலும் தற்பொழுதும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறு நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ள வெளிநாட்டு பணியாளர்கள் குறித்து கண்டறிவதற்கு பணியகத்தினால் பொருத்தமான மாதிரியொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு 800 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்ததுடன், இவ்வளவு பாரிய தொகையை செலவுசெய்து பராமரிக்கப்படும் ஊழியர்களால் எதிர்பார்க்கப்படும் சேவைகள் வழங்கப்படுகின்றதா என்பதை கண்டறிய வேண்டுமென கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவித்தது.

Paid Ad