ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மீண்டும் மண்சரிவு அபாயம்

 

குடாகம பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சாரதிகளுக்கு எச்சரிக்கை

தற்போது நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் சிலஇடங்களில் மீண்டும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அலுவலகத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எம். சாதிக் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த வீதியூடாகப் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம பகுதியில் அண்மையில் மண்மேடு சரிந்து வீதியில் விழுந்த இடத்திலேயே மீண்டும் மண்சரிவு ஏற்படுவதற்கான அதிக அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த பகுதியில் வீதியில் சரிந்து விழுந்த மண் அகற்றப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்தும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுவதால், அவ்விடத்தினூடான வாகனப் போக்குவரத்து தற்போது ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறைவேற்றுப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, அப்பகுதியூடாகப் பயணிக்கும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துவதுடன், வீதிப் பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles