அடுத்த தலைவர் பஸில்! உறுதிப்படுத்தியது மொட்டு கட்சி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடுத்த தலைவர் பஸில் ராஜபக்ச என்ற சமிக்ஞையை அக்கட்சி நேற்று வெளிப்படுத்தியது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் பங்கேற்று கருத்துகளை வெளியிட்டனர்.

ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ரஞ்சித் பண்டார,

” தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி புதிய தலைமைத்துவத்தின்கீழ் பயணிக்கும் என்றோம். மே தினத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு மத்தியில் தலைமைத்துவத்தை நாம் கண்டுவந்தோம். அரசியலை பற்றி தெளிவுள்ளவர்களுக்கு எனது கருத்தின் ஆழம் புரியும்.” – என்றார்.

மேடையில் இரு தலைவர்கள் இருந்தனர், நீங்கள் கூறும் தலைவர் மஹிந்தவா, பஸிலா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

” பஸில் ராஜபக்ச எனக்கூறுவதற்கு நாம் ஏன் அஞ்ச வேண்டும்? மஹிந்த ராஜபக்சவின் வேலைத்திட்டங்களைதான் நாம் முன்னெடுக்கின்றோம்.” என்றார்.

அப்படியானால் புதிய தலைமைத்துவம் இல்லையே…என்ற கேள்விக்கு,

” யார் இல்லை என சொன்னது, ஊடகவியலாளர்களுக்கு தெரிந்த அரசியல்தான் உங்களுக்கு புரிகின்றது. மே தினத்தில் அரசியல் தெரிந்தவர்களுக்கு அந்த உண்மை புரிந்தது.” என்று ரஞ்சித் பண்டார குறிப்பிட்டார்.

அப்படியானால் கட்சியின் அடுத்த தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் பஸில் ராஜபக்சவா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு,

” நீங்கள் விரும்பியவாறு இதனை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.” என்றார் ரஞ்சித் பண்டார.

கேள்வி – ” புத்தாண்டுக்கு பின்னர் அறிவிப்பேன் என்றீர்களே,…”

பதில் – ” அதுதான் தெளிவாக அறிவித்துவிட்டேன்.”

கேள்வி – ” அடுத்த தலைவர் பஸிலா”?

பதில் – ” உங்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.

கேள்வி – ” நீங்கள் கேள்விக்கு சரியாக பதிலை வழங்கவில்லையே…”

பதில் – ” உங்கள் புரிதலுக்கு நன்றி.”

Related Articles

Latest Articles