அனைத்து தமிழ்க் கட்சிகளுக்கும் ஜனாதிபதியுடன் உறவு உள்ளது

ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து ஆட்சியில் இருந்தாலே வீழ்ச்சியில் இருந்து மீள முடியும் – என்று ஈ.பி.டி.பி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கதான் வெல்ல இருக்கிறார். அந்த வெற்றியில் நாமும் பங்காளராக வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் பல கட்சிகள் உள்ளன. அனைத்து கட்சிகளும் எதோ ஒரு வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உறவை வைத்துள்ளன.

எதிர்வரும் தேர்தலில் தமது ஆத்மார்த்த ஆதரவு அவருக்குத்தான் என அவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் வெளியில் வேறு முகத்தை காட்டுகின்றனர். ஆனால் குறித்த நபருக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என எவரும் ஈ.பி.டி.பி கட்சிக்கு பணிக்க முடியாது.

ஈபிடிபி கட்சி என்ற வகையில் நாம் ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். எப்பொழுதும் மக்கள் நலன் சார்த்த தனித்துவமான முடிவைத் தான் எமது கட்சி எடுத்து வந்துள்ளது. ஏனைய கட்சிகளுக்கு யார் பணிப்புரை வழங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெல்வதன் ஊடாகவே நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்க முடியும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் சார்ந்த அபிவிருத்தி சார்ந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினையாக இருந்தாலும் அவர் ஊடாகவே சாத்தியமாகும் என நம்புகிறோம்.

காணிப் பிரச்சினையாக இருந்தாலும் அரசியல் உரிமையாக இருந்தாலும் அவரால் தான் தீர்வு பெற்றுத்தர முடியும்” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles