அமெரிக்க பால் பண்ணையில் தீ விபத்து – 18 ஆயிரம் மாடுகள் பலி

அமெரிக்காவிலுள்ள பால்பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 18 ஆயிரம் மாடுகள் பலியாகியுள்ளன.

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பால்பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் நேற்று திடீரென தீ பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பண்ணை முழுவதும் பரவி பெரிய வெடி விபத்தாக மாறியது.
இதனால் பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

மேலும் அந்த பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து கொண்டது. இதில் பால் கறப்பதற்காக பண்ணையில் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருந்த ஏராளமான மாடுகள் தீயில் சிக்கி எரிந்து கருகியன.

பால்பண்ணையில் ஏற்பட்ட இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பண்ணையில் இருந்த ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்து கிடந்தன.

அவற்றை கணக்கிட்ட போது மொத்தம் 18 ஆயிரம் மாடுகள் இறந்து கிடந்தன தெரியவந்தது. மேலும் இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒரு தொழிலாளி ஆபத்தான நிலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்சாதனங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து டெக்சாஸ் தீயைணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Latest Articles