ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இந்திய விஜயத்தின்போது அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் முதல் நாளில் பேச்சுகளை நடத்தினோம். இச்சந்திப்புகளின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகள் மேலும் வலுவடைந்தன.
அத்துடன், இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவில் புதிய அத்தியாயமும் ஆரம்பமாகியுள்ளது. இது எமது நாட்டு மக்களுக்கு கிடைக்கப்பெற்ற வெற்றியாகும்.
இந்திய பிரதமருடனும் இரு தரப்பு பேச்சுகள் இடம்பெற்றன. கூட்டறிக்கையொன்றும் வெளியிடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இந்திய ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தோம். மூன்றாம் நாள் புத்தகயாவுக்கு சென்றிருந்தோம்.
எமது நாட்டை சேர்ந்த 1,500 அரசாங்க ஊழியர்களுக்கு , அரசாங்க துறை தொடர்பில் இந்தியாவில் பயிற்சி திட்டம் மற்றும் இரு தரப்பு வரி விலக்கம் ஆகிய இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே கைச்சாத்திடப்பட்டன. வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடடுக்கு வரவில்லை. அவை தொடர்பில் பேச்சுகள் நடத்தப்படும்.
ஒரு அரசாங்க ஊழியருக்கு இரு வாரங்கள் என்ற அடிப்படையில், ஐந்து வருட காலப்பகுதிக்குள் இப்பயிற்சி திட்டம் இடம்பெறும்.” -என்றார்.