ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர் வரவில்லை : மூலத்தைத் தேடுவதிலும் சிக்கல்கள் : இராணுவத் தளபதி

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலைக்கு இந்தியர்கள் வந்ததாக கூறப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி லெடினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, எனினும், இதற்கான `மூலத்தை’க் கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இதேவேளை, குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு அண்மையில் இந்தியாவில் இருந்து அதிகாரிகள் சிலர் வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து இராணுவத் தளபதியிடம் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, இந்தியர் வந்ததாக எவ்விதத் தகவல்களும் இல்லை என்று தெரிவித்தார்.

அத்துடன், கொவிட் கொத்து ஒன்று ஏற்பட்டுள்ளதால் எங்கு, யாரிடமிருந்து இந்த தொற்று பரவியது என்பதைக் கண்டறிவது சவால்மிக்கது என்று இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் கடந்த 21ஆம் திகதி முதலே இருமல், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகளுக்காக விடுமுறையில் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles