ஐக்கிய மக்கள் சக்தியின் மேலுமொரு தொகுதி அமைப்பாளரும் பதவி விலகியுள்ளார். தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தவிசாளரும், நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளருமான அசோக சேபாலவே இவ்வாறு, அமைப்பாளர் பதவியை துறந்துள்ளார்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவர் விலகவில்லை. கட்சி ஊடாக பயணம் தொடரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் நான்கு உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர் பதவியை ஏற்கனவே இராஜினாமா செய்துள்ளனர்.
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பட்டியல் ஊடாக கிடைக்கப்பெற்ற ஆசனங்களுக்குரிய உறுப்பினர் தெரிவை மையப்படுத்தியே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட, தொகுதி அமைப்பாளர் பதவியை துறந்துள்ளார்.
ஆசன பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தொட்டை தொகுதி அமைப்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார, தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக்க விஜேரத்ன ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி துறந்துள்ளார்.
எனினும், இவர்களின் பதவி துறப்பு கடிதத்தை ஏற்றுக்கொள்ளாதிருக்க கட்சி தலைமை தீர்மானித்துள்ளதென அறியமுடிகின்றது.