ஆட்டோவில் இருந்து விழுந்த குழந்தை பாதுகாப்பாக உள்ளது – தாயிடம் விசாரணை!

ஆட்டோவொன்றில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும் அறியாமல் அவரின் மடியிலிருந்த ஒரு மாத குழந்தையொன்று வீதியில் நழுவி விழுந்த சம்பவமொன்று கித்துல்கல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு முச்சக்கரவண்டிகளில் சிவனொளிபாதமலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்தனர். குடும்பத்தின் தந்தை, தாய் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் ஒரு மாதக்குழந்தையொன்றும் பயணித்துள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தாயின் மடியிலிருந்த ஒரு மாத குழந்தை தவறி வீதியில் விழுந்துள்ளமை மூன்று கி.மீ. தூரம் பயணித்த பின்னரே தாய்க்கு தெரியவந்துள்ளது.
குழந்தை காணாமல் போனதை தொடர்ந்து பதற்றமடைந்த பெற்றோர் வந்த வழியே மீண்டும் குழந்தையைத் தேடி சென்றுள்ளனர்.
இதன்போது அவ்வழியாக மோட்டார் கார் ஒன்றில் வந்த சாரதி குழந்தையை மீட்டு பொலிஸார் ஊடாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்துப் பெற்றோர் கித்துல்கல வைத்தியசாலைக்கு விரைந்துள்ளனர். இங்கு சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் இல்லாமையால் குழந்தை கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தைக்கு சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது, அவர் இயல்பு நிலையில் இருக்கின்றார், எனினும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றார். தாயிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

தாய்க்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தாலேயே குழந்தை தவறி விழுந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles