தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்க காரணமாக இருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு கொட்டகலை பிரதேச சபை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உறுப்பினர்கள் அவர்களை பாராட்டியும், வாழ்த்தியும் உரையாற்றியுள்ளனர்.
கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு அதன் தலைவர் ராஜமணி பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய ராஜமணி பிரசாந்த் கூறியவை வருமாறு,
” இ.தொ.கா. தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தமது இறுதி மூச்சு வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திவந்தார். அவரது மறைவுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தாம் பதவியேற்ற தினத்திலிருந்து கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.
அதேபோல், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். ராமேஸ்வரனும் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வந்தார். எதிரணியினர் தமது மனம் போன போக்கில் விமர்சனங்களை முன்வைத்து வந்த போதிலும், அவற்றையெல்லாம் பொருட் படுத்தாது ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுப்பதிலேயே குறியாக இருந்து வந்தார்கள்.
ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க கம்பனிகள் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 8 ஆந் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் ஊடாக நாளாந்தம் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக சம்பள உயர்வு விடயத்தில் இம்முறை அரசாங்கத்தின் தலையீடு குறிப்பிடத் தக்க வகையில் இருந்து வந்துள்ளது.
அதேநேரம், அரசியல் தொழிற்சங்க பேதமின்றி தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் வர்க்க உணர்வோடு கடந்த 5 ஆந் திகதி இ.தொ.கா. ஏற்பாடு செய்திருந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு மலையக மக்களின் ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளார்கள்.
அதேபோல், இ.தொ.கா. இளைஞர் அணித் தலைவர் என்ற வகையிலும், பிரதேச சபை என்ற ரீதியிலும் நான் விடுத்த வேண்டுகோளுக்கு சேவை சாய்த்து வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடைகளை மூடி ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ஏனைய தொழிற்சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், தொழிலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள்,, பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன். ” – என்றார்.










