இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நிலவி காணப்படும் நல்லுறவையும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பலமான தொடர்புகளையும் கொண்டாடும் வகையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார்.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் (India House) நேற்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில், இந்திய மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இரு போட்டிகளாக நடக்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக இந்த வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இத்தொடர் இரு நாடுகளின் 2025–27 ஐ.சி.சி. (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பயணத்தின் ஆரம்பத்தையும் குறிக்கிறது.
இந்திய மற்றும் இலங்கை மக்களுக்கிடையேயான நீண்டகால நட்புறவை வலுப்படுத்த கிரிக்கெட் விளையாட்டு பெற்றுத் தரும் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது இந்நிகழ்வின் நோக்கமாக அமைந்து காணப்பட்டது.
கிரிக்கெட் விளையாட்டு இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பொதுவான விருப்பமாக விளங்குவதுடன், இது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் முன்னேற்றுவதற்கான முக்கியமானதொரு தளமாகவும் இந்த சந்தர்ப்பம் மாறியது.










