பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) இஸ்லாமாபாத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர் உடல் தகுதியுடன் (medically fit) இருப்பதாக மருத்துவர்கள் உறுதிசெய்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கண் மருத்துவர், இருதயவியல் நிபுணர் மற்றும் பொது மருத்துவர் உள்ளடங்கிய தகுதிவாய்ந்த மருத்துவக் குழுவினரால் அவர் பரிசோதிக்கப்பட்டதாக பாக்கிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் அதாவுல்லா தரார் (Attaullah Tarar) தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானின் உடல்நலக் குறைபாடு குறித்த புகார்களைத் தொடர்ந்து, அவரை 48 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் சிறையிலடைக்கப்பட்டதற்குப் பிறகு நீதிமன்றத்திடமிருந்து அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய நிவாரணமாக இது பார்க்கப்படுகின்றது.
மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுடன், பல மாதங்களாக அனுமதிக்கப்படாத குடும்பத்தினருடனான சந்திப்பிற்கும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதன்படி செவ்வாய் இரவே அவரது சகோதரி அஸ்மா கான் (Azma Khan) அவரைச் சிறையில் சந்தித்துப் பேசினார். வியாழக்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைகளின் அனைத்து நிலைகளின் போதும் அவரது சகோதரி உடனிருந்ததாக அமைச்சர் தரார் சுட்டிக்காட்டினார்.
இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சி வழமையாக நீதிமன்ற முடிவுகள் அவருக்கு எதிராக அமையும் போது அரசியல் பழிவாங்கல் எனக் குற்றம் சாட்டும். எனினும், உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவின் பின்னணியிலுள்ள அரசியல் நகர்வுகள் குறித்து அக்கட்சி உடனடியாக பகிரங்கக் கருத்து எதையும் வெளியிடவில்லை.
இஸ்லாமாபாத்தின் ‘ஷிஃபா சர்வதேச மருத்துவமனை’ (Shifa International Hospital) சூழப்பட்ட பகுதி பொலிஸ் தடைகள் மற்றும் வாகனங்கள் கொண்டு முழுமையாக மூடப்பட்டிருந்தது. வீதிகளைச் சுத்தப்படுத்த பொலிஸ் வாகனங்கள் மற்றும் கவச வாகனங்கள் மூலம் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
73 வயதான இம்ரான் கானின் பார்வைத்திறன் குறைபாடு உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு மருத்துவச் சிகிச்சைகளைப் பெற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்திருந்தனர்.
சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இம்ரான் கானின் வலது கண்ணில் 15 சதவீத பார்வைத்திறன் மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கடந்த பெப்ரவரியில் அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்த போதிலும், அரசாங்கம் அதை மறுத்திருந்தது.
“கைதி ஒருவரின் வாழ்வு, சுகாதாரம், கண்ணியம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவது எமது அரசியல் அமைப்பு மற்றும் சட்டப்பூர்வக் கடமையாகும்” என செவ்வாய்க்கிழமை வழங்கிய உத்தரவில் நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியிருந்ததுடன், அவரது சிகிச்சையில் கண் மருத்துவ நிபுணரும் சேர்க்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தது.
அதேநேரம், மருத்துவமனைக்கு வெளியே ஆதரவாளர்கள் ஒன்றுகூடக் கூடாது என நீதிபதிகளும் பி.டி.ஐ (PTI) கட்சியினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
பாக்கிஸ்தான் தேசியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான இம்ரான் கான், 2018 முதல் 2022 வரை நாட்டின் பிரதமராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.










