22ஆவது திருத்தம்:13 நீதியரசர்கள் கொண்ட முழுமையான அமர்வு வேண்டும்

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்திலுள்ள 13 நீதியரசர்களையும் உள்ளடக்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு (Full Bench) முன்னிலையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும் என சட்டத்துறைப் பேராசிரியரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:

“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து முதல் 24 மணிநேரத்திற்குள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இதற்கு முன்னர் 21 தடவைகள் திருத்தச்சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், இந்த அளவிற்கு மனுக்கள் குவிந்தது கிடையாது.

எனவே, உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள 13 நீதியரசர்களையும் கொண்ட முழுமையான நீதியரசர்கள் அமர்வே இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயக கலாசாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் விண்ணப்பிக்க வேண்டும். ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையைப் பெறுவதற்கு நீதித்துறையின் சுயாதீனம் என்பது மிக முக்கியமானதொரு நிபந்தனையாகும்.

எனவே, அரசாங்கம் இந்த 22 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி நீதித்துறையின் சுயாதீனத்தைக் கேள்விக்குறியாக்கினால், ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு நடக்குமாயின், அது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பாரிய மரண அடியாக அமையும்” என ஜி.எல்.பீரிஸ் எச்சரித்தார்.

Related Articles

Latest Articles