இரவோடு இரவாக எரிபொருள் விலையை அதிகரித்த IOC : எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்ற வாகனங்கள்!

லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 162 ரூபாவாகவும், டீசல் ஒரு லீட்டர் 116 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், சுப்பர் டீசல் விலை அதிகரிக்கப்படவில்லை.
கடந்த இரண்டு நாட்களாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் முழு அளவிலான எரிபொருள் கொள்வனவில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.
இதுகுறித்து நிதியமைச்சின் உயர் அதிகாரியொருவர் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் விலையை அதிகரிப்பதாக IOC நிறுவனம் எந்தவொரு அறிவித்தலையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டார்.
அத்துடன், IOC நிறுவனம் இதற்கு முன்னரும் தன்னிச்சையாக எரிபொருள் விலையை அதிகரித்ததாக எரிசக்தி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையிலேயே IOC நிறுவனம் விலை அதிகரிப்பை செய்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எனினும், எரிபொருள் விலையை மேலும் அதிகரிப்பதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்ததால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலை அதிகரிப்பை செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு எவ்விதத் தீர்மானமும் இல்லை என்ற போதிலும் விலை அதிகரிப்பிற்கான ஆதரவை வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles