இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ள அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், உள்ளகப்பொறிமுறைகள் ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்ற விடயமும், பொறுப்புக்கூறலுக்கு சர்வதேசத்தின் பங்கேற்பு அவசியம் என்ற வலியுறுத்தலும் மேற்படி அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவிருக்கும் அறிக்கையே காட்டமாக அமைய வேண்டும் என சுமந்திரன் இடித்துரைத்துள்ளார்.
‘ இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தான் கோரப்பட்டிருந்தது.
எனினும், அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், உள்ளகப்பொறிமுறை ஊடாக எதனையும் செய்யமுடியாது என்பதைப் பேரவை புரிந்துகொண்டது. அதனையடுத்து 2014 ஆம் ஆண்டிலேயே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே நாட்டில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டது.”- எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
இலங்கை விவகாரத்தை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, பாதுகாப்புச்சபை உள்ளிட்ட ஏனைய கட்டமைப்புக்களுக்குள் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.