இலஞ்சம் பெற முயன்ற வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது!

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட 19 சீனப் பிரஜைகளின் கடவுச்சீட்டுகளை சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் அவர்களிடம் மீள வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைபாட்டிற்கமைய மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் குழுவினரால் இன்று(27) காலை சந்தேகநபரான பொறுப்பதிகாரி, வெயங்கொடை பகுதியில் கைது செய்யப்பட்டார்.

கடந்த 02ஆம் திகதி வெலிக்கடை பகுதியில் இணையத்தள மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 92 சீனப் பிரஜைகள் ஹோட்டலொன்றில் தங்கியிருந்த நிலையில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்தவர்கள் தப்பிச்சென்றதுடன் அவர்களில் 19 பேரின் கடவுச்சீட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபரான வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றுமொரு பெண்ணுடன் இணைந்து குறித்த கடவுச்சீட்டுகளை மீண்டும் சீனப் பிரஜைகளுக்கு வழங்குவதற்காக இலஞ்சம் பெற முயன்றுள்ளார்.

இதன்போது நபர் ஒருவரிடமிருந்து அவர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகள் கடந்த 17ஆம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்தை சோதனையிட்ட போது அங்கு கடவுச்சீட்டுகள் எதுவும் கிடைத்திருக்கவில்லை.

பின்னர் குறித்த 19 கடவுச்சீட்டுகளும் சந்தேகநபரான பொறுப்பதிகாரியினால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாளை(28) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles