ஈழத்திலிருந்து மலையகத்துக்காக ஒலித்தக் குரல்: தமிழ்த் தேசிய அரசியல் தலைவர் சிவாஜிலிங்கம் காலமானார்

மூத்த தமிழ்த் தேசிய அரசியல் தலைவரான வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானஎம்.கே.சிவாஜிலிங்கம், தனது 69 வயதில் நேற்றிரவு காலமானார்.

நீண்ட காலமாக உடலநலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிறுநீரகமாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.

அதையடுத்து குணமடைந்து வந்த அவர் அண்மையில் உடல் நிலை மோசமானதை அடுத்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், நேற்றிரவு 11.35 மணியளவில் அவர் வல்வெட்டித்துறையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெலோ அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக 2001ஆம் ஆண்டு தொடக்கம், 2010ஆம் ஆண்டு வரை, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தார்.

அதன் பின்னர், 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்று 2018ஆம் ஆண்டு வரை அதன் உறுப்பினராக பணியாற்றினார்.

2025 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட அவர் அந்தப் பதவியில் இருந்த போதே காலமானார்.

மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்தவர். மலையக மக்களுக்காக யாழில் பல போராட்டங்களையும் நடத்தியுள்ளார்.

Related Articles

Latest Articles