உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளியிடப்படும்!

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்தபோது அரசாங்கத்தில் இருந்த மூன்றாவது பலம்பொருந்திய நபர்தான் சஜித் பிரேமதாச. ரஞ்சித் மத்தும பண்டார பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். எனவே, மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை வெளியிட வேண்டியுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்துக்கு வந்தால் அவை வெளியிடப்படும்.”

இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு அமையவே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட வேண்டும். இதனை உறுதிப்படுத்திக்கொள்வதே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கும் தரப்பின் முதன்மை பணியாக இருக்க வேண்டும்.

எனவே, எதிரணிகள் உரிய வகையில் முதலில் பிரேரணையை கொண்டுவரட்டும். அவ்வாறு கொண்டுவந்தால் அது தொடர்பான விவாதத்தில் நாம் மகிழ்வுடன் பங்கேற்போம். ஏனெனில் விவாதத்தின்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முக்கிய பல தகவல்களை வெளியிட வேண்டியுள்ளது.

விசாரணைகள் முறையாக இடம்பெற்றுவருவதால் நாடாளுமன்றத்தில் இதுவரையில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அப்பால் மேலும் பல விடயங்களை எம்மால் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்தபோது அரசாங்கத்தில் மூன்றாவது நபராக சஜித் இருந்தார். ரஞ்சித் மத்தும பண்டார சட்டம், ஒழுங்கு அமைச்சராக செயற்பட்டு இருக்கின்றார். இவர்கள் தொடர்பிலும் குறிப்பிட பல விடயங்கள் உள்ளன.

இவர்களால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் என்ன? கைது செய்யப்பட்ட நபர்கள் யார்? விசாரணைகளுக்கு என்ன நடந்தது என்பன பற்றி எம்மால் குறிப்பிட முடியும். அதற்கான வாய்ப்பை உருவாக்கி தரப்போகும் எதிரணிக்கு நன்றிகள்.” – என்றார்.

Related Articles

Latest Articles