ஊவாவில் விபத்துகளை கட்டுப்படுத்த ஆளுநர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஊவா மாகாண வீதிகளில் அபாயகரமான இடங்களை அடையாளம் கண்டு, அத்தகைய இடங்களில் வாகனங்களின் வேகத்தடைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்க, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் உத்தரவிட்டார்.

ஊவா மாகாண ஆளுனர் அலுவலகத்தில் 26-03-2021ல் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், போக்குவரத்துச் சேவை நிறைவேற்று உத்தியோகத்தர்கள் அடங்கிய விசேட கூட்டத்தின்போது, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் மேற்கண்ட உத்தரவினை விடுத்துள்ளார்.

பசறை – 13வது மைல் கல்லருகே கடந்த 20ந் திகதி நடைபெற்ற கோர பஸ் விபத்தினையடுத்து, இனிமேலும் இவ்வகையிலான விபத்துக்கள் ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவ் விபத்தில் 15 பேர் பலியானதுடன், 30க்கு மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர்.

இவ் விபத்து இடம்பெற்ற இடத்தில் பாதுகாப்பு வேலி உறுதியாக அமைக்கப்பட்டிருக்கின்றது. வேகத்தடைகளும் பாதை மத்தியில் போடப்பட்டுள்ளது. அபாயம் ஏற்படக்கூடிய இடமென்பதை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளையும் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விபத்திற்கு காரணமான பெருங்கற்பாறையை அகற்றும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கை
விபத்துக்குள்ளான என்.டி.6448 என்ற இலக்கத்தையுடைய இத் தனியார் பஸ் கால அட்டவணைக்கு புறம்பாகவே பயணித்துள்ளமை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ’20ந் திகதி காலை 6.50 க்கு லுணுகலையிலிருந்து புறப்பட வேண்டிய இப்பஸ், காலை 6.20 க்கு புறப்பட்டுள்ளது. 7.15க்கு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இப் பஸ் முதல் தினம் 19ந் திகதி இரவு 7.40க்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு 20ந் திகதி அதிகாலை 4.45க்கு லுணுகலை பஸ் நிலையத்திற்கு வந்துள்ளது. கொழும்பிலிருந்து லுணுகலைக்கு வர இப்பஸ் 9 மணித்தியாலங்களும் ஐந்து நிமிடமும் எடுத்துள்ளது. ஒரு மணித்தியாலத்தில் 31.1 கிலோமீட்டர் என்றடிப்படையில், இப் பஸ்சின் வேகம் அமைந்திருந்தது.

பொறுப்பற்ற நிலை, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமை, பாதுகாப்பு வேலி இல்லாமை, வேகத்தடையின்மை ஆகியனவே, இவ்விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் திலூம் அமுனுகம ஆகியோருக்கும், அவர்களது செயலாளர்களுக்கும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles