” மனோ கணேசன் யார்? மலையகத் தமிழரா, இல்லையா என்ற பிரச்சினை வந்தது, நான் தலைமை வகிக்கும் கட்சி, மலையக தமிழர்களை அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும். நான் மலையகத் தமிழரா என தெரியாது….நான் நாடோடித் தமிழன், அதுதான் உண்மை, அதனால்தான் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றேன், இதில் பிரச்சினை கிடையாது, எனக்கு அடையாளம் தேவையில்லை.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (01) நடைபெற்ற “முரசு” டிஜிட்டல் நாளிதழ் அறிமுக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மனோ கூறியவை வருமாறு,
” மலையகத் தமிழர்களின் இன்றைய துன்பத்துக்கு, துயரத்துக்கு, கஷ்டத்துக்கு , கண்ணீருக்கு, பின்தங்கிய நிலைமைக்கு காரணம் என்ன? முதல் காரணம், சிங்கள பேரினவாதம்தான். அதை ஊடகங்கள் துணிந்து எழுத வேண்டும், சுட்டிக்காட்ட வேண்டும்.
ஈழத் தமிழ் மக்களை நோக்கிதான் சிங்கள பேரினவாதம் பாய்கிறது, மலையக தமிழர்களை நோக்கி அது பாயவில்லை என சிலர் நினைக்கலாம். உண்மை அதுவல்ல, தோட்டங்களில் காணி அபகரிப்பு இடம்பெறுகின்றது. தோட்டங்களை அண்டியுள்ள பெரும்பான்மையின மக்கள் நிலத்தை அபகரித்தால் தோட்ட நிர்வாகம் வராது, பொலிசும் வராது. ஆனால் தோட்ட தொழிலாளர்கள் சிறு துண்டு நிலத்தை பிடித்தால்கூட எல்லாம் வந்துவிடுவார்கள், கடைசியில் மனோவும் வந்துவிடுவார், ஏன் சண்டையிட்டு அதனை தடுத்து நிறுத்துவதற்கு…
அடுத்த காரணி இந்தியா, மலையக தமிழர்களை அங்கு எடுத்திருக்காவிட்டால் மலையக பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கும். தெற்கு அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக மலையக பிரதிநிதித்துவம் இருந்திருக்கும். அடுத்தது, பிரிட்டன்.” – என்றார்.










