எனது மகனுக்கு கட்சியில் பதவி இல்லை – திகா திட்டவட்டம்

“தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு தொழிலாளி ஒருவரின் பிள்ளையே தலைவராகவேண்டும். ஒருபோதும் எனது மகனை கொண்டுவந்து கட்சியில் பதவிகளை வழங்கமாட்டேன்.” – என்று சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

வீடு வேண்டும் என்ற எல்லோருடைய கோரிக்கையையும் ஒரே நாளில் நிறைவேற்றிவிடமுடியாது. எல்லோருக்கும் வீடுகளை கட்டிக்கொடுத்துவிட்டோம் எனவும் நான் கூறவில்லை. எமக்கு கிடைத்த நான்கரை வருடங்களில் பல வீட்டுத்திட்டங்கள் முன்னெடுத்தோம். இதனால்தான் தனிவீடு தொடர்பான கருத்தாடல்கள்கூட இன்று இடம்பெற்றுவருகின்றன.
எனக்கு பின்னால் எனது மகன் அரசியலுக்கு வரப்போவதில்லை. ஏனெனில் அவருக்கு உங்களைப் பற்றி தெரியாது. சொகுசாக வாழ்ந்தவர். ஆனால் நான் அப்படியானவன் அல்லன். உங்களது கஷ்டங்கள் அறிந்தவன். அவற்றை நானும் அனுபவித்துள்ளேன்.  எனவே, என்னுடைய மகனை கொண்டுவந்து தொழிலாள் தேசிய சங்கத்தின் தலைவராக்கமாட்டேன். இந்த சங்கத்துக்கு தலைவராகக்கூடிய தகைமை – உரிமை உங்களின் பிள்ளைகளுக்கே இருக்கின்றது. தேர்தலுக்காக இதனை நான் பேசவில்லை. உண்மையாகவே சொல்கின்றேன்.
மலையக இளைஞர்களே, நுவரெலியா மாவட்டத்தில் எமது இருப்புக்கு ஆபத்து வரப்போகின்றது. ஒரு கட்சியில் எட்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குகளை சிதறடிக்க மேலும் பலர் போட்டியிடுகின்றனர். எமக்கான பிரதிநிதித்துவம் இருந்தால் மட்டுமே பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கதைக்கமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால் தட்டிக்கேட்கமுடியாத சூழ்நிலை ஏற்படும்.
நாம் என்றும் மக்களோடு மக்களாகவே இருப்போம். ஓடி ஒளியமாட்டோம். எமது கைகளுக்கு மீண்டும் அதிகாரம் வந்தால் அபிவிருத்தியில் புரட்சியை ஏற்படுத்துவோம்.
அண்ணன் கிரிக்கெட் விளையாடினார் என்பதற்காக தம்பியை இங்கு களமிறக்கி கோடி கணக்கில் செலவுகளை செய்து, பெட், போல்களை வழங்கி வாக்குகளை உடைத்து, எமது பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கின்றனர்.
அதேவேளை, போர்காலத்தில் கொழும்பில் இருந்துக்கொண்டு தமிழ் மக்களுக்காக போராடியவர்தான் எமது தலைவர் மனோ கணேசன். அவரை கட்டாயம் கொழும்பில் வெற்றிபெற செய்யவேண்டும். அதற்கேற்ற வகையில் நமது தமிழ் மக்கள் வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.

Related Articles

Latest Articles