336 உள்ளாட்சி சபைகளுக்கு ஜனநாயகத் திருவிழாவான தேர்தல் நடைபெறவிருந்தாலும், கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றுவது குறித்து பிரதான கட்சிகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.
குட்டி தேர்தலிலும் தமக்கே வெற்றியென அடித்துக்கூறும் தேசிய மக்கள் சக்தி, கொழும்பு மாநகரசபையிலும் வெற்றிக்கொடி நாட்டுவோம் என சூளுரைத்துள்ளது.
பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றி, கொழும்பு மாநகரசபையை இழந்தால் அது என்பிபி அரசாங்கத்துக்கு அரசியல் பின்னடைவாக அமையக்கூடும். எனவே, அச்சபையைக் கைப்பற்றுவதற்கு திசைக்காட்டியினர், தீவிரமாக செயல்படக்கூடும். இதற்காக விரோய் கெலீ பல்தசார் தலைமையில் பலமானதொரு அணியை தேசிய மக்கள் சக்தி களமிறக்கவுள்ளது.
மறுமுனையில் அநுர அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் சமரை, முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமெனில் அதற்கானதொரு பிரதான அஸ்திரம் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு தேவைப்படுகின்றது. எனவே, கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றினால் அங்கிருந்து ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என சஜித் அணி கருதுகின்றது.
இரு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் பொதுத்தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவம் தொடர்பில் கட்சிக்குள், கூட்டணிக்குள் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த குட்டி தேர்தல் சஜித்தின் இருப்புக்கும் முக்கியத்துவம்மிக்கதாக அமைகின்றது. எனவே, சஜித்தும், அவரது சகாக்களும் இந்த அக்கினிப்பரீட்சையை எதிர்கொள்வதற்கு தீயாக செயற்படக்கூடும்.
கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்குவதற்கு கடந்தமுறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபூர் ரஹ்மான் இராஜினாமா செய்தார். எனினும், இம்முறை கட்சிக்காக அந்த தியாகத்தை செய்வதற்கு அவர் தயாரில்லை என தெரிகின்றது.
கடவத்த தொகுதியை கைவிட்டு கொழும்பு மாநகர கோட்டைக்குள் நுழைவதற்கு ஹிருணிக்காவும் இழுத்தடிப்பு செய்கின்றார். எனவே , சிரேஷ்ட உறுப்பினரான, நிதி மற்றும் பொருளாதார நிபுணரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை மேயர் வேட்பாளராக களமிறக்குவது பற்றி சஜித் தரப்பு பரிசீலித்துவருகின்றது என அறியமுடிகின்றது.
2018 தேர்தலில் சஜித், ரணில் அணிகள் ஒன்றிணைந்திருந்தவேளையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றியது. தற்போது இரு அணிகளாக அவர்கள் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாநகரசபையில் ஆட்சியை தீர்மானிக்கும் அரசியல் சக்திகளுள் ஒன்றாக ஜனநாயக மக்கள் முன்னணி, இம்முறை தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஏணி சின்னத்தில் களமிறங்கவுள்ளது.
பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்த முற்போக்கு கூட்டணி, கொழும்பில் தமக்கான இருப்பை உறுதிப்படுத்துவதற்காக இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு முழுவீச்சுடன் இயங்கக்கூடும்.
கடந்தமுறை கொழும்பில் சேவல் சின்னத்தில் களமிறங்கிய காங்கிரஸ், கொழும்பு தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
அதேபோல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி என்பனவும் கொழும்பு மாநகரசபைக்கு வேட்பாளர்களை நிறுத்தவுள்ளன.
சிலவேளை அடுத்துவரும் நாட்களுக்குள் இணக்கப்பாடு ஏற்படும்பட்சத்தில் சஜித், ரணில் அணிகள் கொழும்பு மாநகரசபைக்கு கூட்டாக களமிறங்கக்கூடும். முயற்சி கைகூடாவிட்டால் ஐதேக தனித்து களமிறங்கும். சாகல ரத்நாயக்க அல்லது ரோசி சேனாநாயக்க மேயர் வேட்பாளர்களாக போட்டியிடக்கூடும்.
கொழும்பு மாநகரசபை ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது?
நாட்டில் தலைநகரம் அமைந்துள்ள மாவட்டத்தில் கொழும்பு மாநகர எல்லை பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களுக்கும் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாகவும் அது விளங்குகின்றது.
2018 ஆம் ஆண்டில் மொட்டு கட்சி உள்ளாட்சி சபைத் தேர்தலில் வெற்றிநடைபோட்டாலும் அக்கட்சியால் கொழும்பு மாநகரசபையைக் கைப்பற்றமுடியாமல்போனது.
இம்முறை தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி சார்பு அணிகளின் அரசியல் கோட்டையும் தரைமட்டமாகிவிடும்.
2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் 46.9 சதவீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களை வென்றது. 21.8 சதவீத வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு 23 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
பகுதி – 03
குட்டி தேர்தல் பற்றிய பார்வை தொடரும்
ஆர்.சனத்