எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் எனவும் அத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 100 லட்சம் வாக்குகளைப்பெற்று வெற்றிபெறுவார் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசியக் கட்சியால் நடத்தப்பட்ட முதலாவது பொதுக்கூட்டம் நிதர்சனம் எனும் தொனிப்பொருளின்கீழ் குருணாகல், குளியாபிட்டியவில் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வஜிர மேற்கண்டவாறு கூறினார்.
“ இலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி அடைந்தபோதெல்லாம் இந்நாடும் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதே உண்மை. பொய்கள்மூலமே ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். 2020 பொதுத்தேர்தலின்போதும் உண்மை தோற்கடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின்னர் உண்மை வென்றது. தனி ஒருவனாக நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவானார். இது உலகசாதனையாகும்.
இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அதாவது 100 லட்சம் வாக்குகளைப் பெற்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க வரலாற்றில் இடம்பிடிப்பார்.” – என்றார்.
