ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளமும், சலுகைகளும் பெறுபவர்களே வரிக்கு எதிராக போராடுகின்றனர்

ஒரு இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பளம், மூன்று வேளை உணவு மற்றும் சலுகைகளைப் பெற்று வரும் துறைமுக ஊழியர்களே வரி அதிகரிப்பு தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாதெனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

கடந்த முறை இவ்வாறு துறைமுக ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால், இலங்கைக்கு வருகை தந்த 17 கப்பல்கள் வேறு நாடுகளை நோக்கிச் சென்றன. இதனால் நாட்டுக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டது. அந்தக் கப்பல்களை மீளக் கொண்டு வருவதற்கு நாம் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டோம். எனினும் அவற்றில் சில கப்பல்களே மீண்டும் நாட்.டுக்கு வருகை தந்தன. தொடர்ச்சியான நட்டத்தை தவிர்த்து தற்போது துறைமுக அதிகார சபை 15 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது. இந்த இலாபத்தை தொடர்ந்து தக்க வைக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி, அத்துறையில் மீண்டும் நட்டம் ஏற்பட இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், எதிர்க்கட்சி எம். பி துஷார இந்துனில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

துறைமுகம் போன்ற துறைகளுக்கு ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் சற்றும் பொருந்தாது. எமக்கான வருமானத்தை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் துறைமுகங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. இத்தகைய போராட்டங்கள் அதற்கு வாய்ப்பளித்து விடும் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டியுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை பெற்றுக் கொள்ள எதிர்பார்த்து ள்ளோம். அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானங்களை மாற்ற முடியாது. இதுபற்றி, அவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

துஷார இந்துனில் எம்பி தமது கேள்வியின் போது, துறைமுகத்தின் கனியங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுவதாகவும் சபையில் தெரிவித்தார்.

எனினும் அதற்கு பதில் அளித்த அமைச்சர் அவ்வாறில்லை. அவர்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெளிவுபடுத்தினார்.

Related Articles

Latest Articles