மின்சாரம் தாக்கி இளைஞன் பலி: கிளிநொச்சியில் சோகம்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி – நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிலகம் ஒன்றில் நேற்றுக் (09) காலை ஏற்பட்ட திடீர் மின்சார விபத்தில் சிக்கி இளம் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சோகச் சம்பவத்தில் கிளிநொச்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் சாரங்கன் (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த இளைஞர் நேற்றுக் காலை வழக்கம் போல் குறித்த தொழிலகத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்தித் தனது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இதன்போது, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அந்த இளைஞரை மின்சாரம் பலத்த வோல்ட்டளவில் தாக்கியுள்ளது.

இதனால், சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு அவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

அங்கிருந்த ஏனைய தொழிலாளர்களினால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பாகத் தர்மபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விபத்து நிகழ்ந்த விதம் மற்றும் கடைச்சல் தொழிலகத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்துப் பலகோணங்களில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles