கொட்டகலை பெருந்தோட்டயாக்கத்திற்குச் சொந்தமான தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தோட்ட நிர்வாகத்துடனான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
கொட்டகலை பெருந்தோட்டயாக்கத்திற்குச் சொந்தமான ஸ்டோனிக்கிளிப், மௌன்ட்வார்னன், போகாவத்த, டிரைட்டன், கிரேக்கிளி, மேபீள்ட், கிரிஸ்லர்ஸ்பார்ம், யுனிபீல்ட், டெரிகிளையர் மற்றும் கெளிவத்த ஆகிய தோட்டப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட தோட்டங்களுக்கு கடந்த 10ஆம் திகதி மேற்கொண்ட கள விஜயத்தின்போது, அப்பகுதி தொழிலாளர்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் குறித்து ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கொட்டகலை பெருந்தோட்டயாக்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுடனான கலந்துரையாடலின் பின்னர், நேற்று (15) கொட்டகலை C.L.F. காரியாலயத்தில் தோட்ட முகாமையாளர்கள், இ.தொ.கா. முக்கியஸ்தர்கள் மற்றும் தோட்டக் கமிட்டித் தலைவர்களின் பங்கேற்புடன் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது, தொழிலாளர்கள் எதிர்நோக்கும் 12 முக்கிய பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தோட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அதில், தொழிலாளர்களிடமிருந்து நியாயமற்ற முறையில் கொழுந்து நிறையின் அளவை அதிகமாக அறவிடப்படுதல், தொழிலாளர்களுடன் உரிய கலந்தாலோசனை இன்றி உற்பத்தி நெறிமுறை (Norm) அதிகரிக்கப்படுதல், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் போயா தினங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒன்றரை நாள் ஊதியம் வழங்கப்படாமை, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான ஊழியர் சேமலாப நிதியம்(EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம்(ETF) வருடாந்த அறிக்கைகள் வழங்கப்படாமை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டன.
மேலும், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்குதல், தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல், தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், மூன்று நாட்களுக்கு மேல் பணிக்கு வராத தொழிலாளர்கள் மீண்டும் பணியில் இணைவதற்கான மருத்துவச் சான்றிதழ் நடைமுறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம்(EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம்(ETF) நன்மைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கும் தீர்வு கோரப்பட்டது.
அத்துடன், தொழிலாளர்களுக்கு தரமான தேயிலைத் தூள் வழங்குதல், மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலைகளை மீண்டும் இயங்கச் செய்தல் மற்றும் தேயிலைத் தோட்டப் பகுதிகளை முறையாகப் பராமரித்து தொழிலாளர்களுக்கு உரிய பணிச்சூழலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய தோட்ட நிர்வாகத்தினர், முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் கவனமாக பரிசீலித்து, நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தேவையான விடயங்களை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சாதகமான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் இ.தொ.கா. தவிசாளர் மற்றும் நிதிச்செயலாளர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதித்தலைவர் அனுசியா சிவராஜா, கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த், சிரேஷ்ட இயக்குநர் லோகதாஸ், காரியாலய உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிற்சங்க தோட்டக் கமிட்டித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொழிலாளர்களின் உரிமைகள், நலன்கள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
