கஜேந்திரகுமாரின் வீட்டுக்கு முன்னால் கம்மன்பில அணி போராட்டம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின், கொழும்பு , பம்பலப்பிட்டிய வீட்டுக்கு முன்னால் இன்று இரண்டாவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்புடன் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இனவாத செயற்பாடுகளைக் கண்டித்தே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் தெரிவித்தனர்.

கஜேந்திரகுமாரின் வீட்டைசூழ இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். விமான படையினரும் வந்திருந்தனர். நீர்த்தாரை பிரயோக வாகனங்களும் வரவழைக்கப்பட்டிருந்தன.

பேரணியாக வந்தவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். வீட்டுக்கு அருகில் செல்வதற்கு இடமளிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றிருந்தனர். சுமார் ஒரு மணிநேரம் அங்கிருந்த பின்னர் கம்மன்பில அணியினர் கலைந்து சென்றனர்.

நேற்றைய தினமும் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு முன்னால் போராட்டம் நடைபெற்றது. ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லை சீலரதன தேரர் தலைமையிலான குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டது. இன்று நேற்றைய தினத்தைவிட அதிகளவானோர் பங்கேற்றிருந்தனர்.

Related Articles

Latest Articles