நுவரெலியா, இஸ்கிராப் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட கதிர்வேல் பாதயாத்திரைக் குழுவினர், கதிர்காமம் நோக்கிய தங்களது புனித யாத்திரையை இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
சிவனொளிபாதமலை அடிவாரத்திலிருந்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட இந்த யாத்திரிகர்கள், நேற்று நுவரெலியா இஸ்கிராப் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தங்கி விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று காலை அங்கிருந்து மீண்டும் கதிர்காமம் நோக்கித் தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் இன்று மாலை வெலிமடை பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றில் தங்கியிருந்து, நாளை அதிகாலை மீண்டும் பயணத்தைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
17 பக்தர்களைக் கொண்ட இந்த பாதயாத்திரைக் குழுவினர், ஒவ்வொரு ஆண்டும் கதிர்காமம் நோக்கிய புனித பாதயாத்திரையை வழக்கமாக மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த ஆண்டில் மலையகப் பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் புறப்பட்டுள்ள முதலாவது பாதயாத்திரைக் குழுவாகவும் இவர்கள் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.










