துப்பாக்கிச் சகிதம் கம்பளை நகரில் கடந்த மாதம் 24 ஆம் திகதி தனியார் வங்கியிலிருந்த 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் பணப்பரிமாற்று இயந்திரத்தை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்கள் 7 பேரையும் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் ஏழுபேரில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அதில் இரட்டையர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலிருந்து சந்தேக நபர்கள் இதற்கு முன்னர், கலஹாவில் இடம் பெற்ற ஒரு வங்கிக்கொள்ளை இரு நகைக்கடை கொள்ளைகளுடனும் தொடர்பு பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கொள்ளையிடப்பட்ட பணத்தில் சந்தேக நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட 18 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவிற்கு வேன் ஒன்று மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் இரண்டு தங்கச் சங்கிலிகள் ஒரு மோதிரம் என்பனவற்றை பொலிஸார் மீட்டுள்ளதோடு பணப்பரிமாற்று இயந்திரமும் கலஹா ஆல்வத்தை பிரதேசத்தில் சுமார் 100 மீற்றர் பாரிய பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் பிரதான சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்ட கைத் துப்பாக்கி அண்மையில் காலிமுகத்திடல் புரட்சியின் போது புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரியின் வீட்டை முற்றுகையிட்ட சந்தர்ப்பத்தில் திருடப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களின் 7 பேரில் கலஹா கிரேட்வெளி தோட்டத்தைச் சேர்ந்த மூவரும் , நான்கு பேர் புத்தளத்தைச் சேர்ந்தவகள் என்றும் தெரியவந்துள்ளது.
இதில் புத்தளத்தைச் சேர்ந்த வயதுடைய பிரதான சந்தேக நபர், கொள்ளையிட்ட பணத்தில் தான் திருமணம் முடிக்க நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தங்கச் சங்கிலி கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் கொடுத்துள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.










