‘கல்விப் புரட்சிமூலம் மலையகத்தில் மாற்றம்’ – தினேஷ்

கல்விப்புரட்சி மூலமே சமூக மாற்றம் என்ற இலக்கை எம்மால் இலகுவில் அடையக்கூடியதாக இருக்கும்.  எனவே, மலையகத்தில் கல்வித்துறையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் விதத்திலான யோசனைகளை முன்வைக்கவுள்ளேன் –என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளரான வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துவரும் வேலாயுதம் தினேஷ்குமாருக்கு நாளுக்கு நாள் பேராதரவு பெருகிவருகின்றது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, மக்கள் மத்தியில் சென்று பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் அவரால் முன்னெடுக்கப்படும் பிரச்சார யுக்தி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

நுவரெலியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், கல்வித் திட்டம் தொடர்பில் கூறியதாவது,

“ஜனநாயக வழியில் மலையகத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, அனைத்து துன்பங்களில் இருந்தும் எமது மக்களை விடுவித்து, எல்லா உரிமைகளையும் பெற்று எமது மக்கள் கௌரவமாக வாழவேண்டும் என்பதே எனது அரசியல் பயணத்தின் பிரதான இலக்காகும். எனது தந்தையும் இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கவே பாடுபட்டார்.

சமூகமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், கல்விப்புரட்சிமூலம் அதனை இலகுவில் அடைந்துவிடலாம் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட விடயமாகும்.
எனவே, பாலர் வகுப்பு முதல் உயர்தரம்வரை எமது சிறார்கள் பாடசாலை செல்வதை உறுதிப்படுத்தினால் இடைவிலகல் குறைந்துவிடும்.

அத்துடன், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டங்களை வழங்குவதன் ஊடாக சிறுவயதில் அவர்கள் தொழிலுக்கு செல்வதை தடுத்து, கல்வியை தொடர்வதற்கான ஒரு உந்து சக்தியை வழங்கலாம்.
இந்தியா அரசாங்கம் தற்போது பல திட்டங்களின்கீழ் புலமைப்பரிசில்களை வழங்கிவருகின்றது. இலங்கை அரசாங்கமும் சில புலமைப்பரிசில்களை வழங்குகின்றன. எனினும், எமது பெருந்தோட்ட மக்களுக்கான கல்வி மேம்பாட்டுக்காக நிதியமொன்று உருவாக்கப்பட்டு, அதன் ஊடாக உதவிகள் வழங்கப்படவேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள்மூலம் உதவிகளைப் பெறலாம்.

அதேவேளை, உயர்கல்வியின் பின்னர் தொழில்பயிற்சியை பெறுவதற்கான ஆலோசனைகளை இளைஞர்களுக்கு வழங்கவேண்டும்.  தற்போது இளைஞர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன. எதிர்காலத்தில் இது விடயத்தில் எமது பணிகள் தொடரும்.

விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு கல்வியின் முக்கியத்துவம் தொடர்பில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மேம்படுத்தப்படவேண்டும். அதேபோல் ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்களும் உருவாக்கப்படும்.

கல்வித்துறையில் புரட்சியை  ஏற்படுத்துவதற்கு மேலும் பல திட்டங்களும் உள்ளன. எமது ஆட்சியில் சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள விசேட செயலணியின் இதற்கான யோசனைகள் முன்வைக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles