இலங்கையின் கல்விக்கு சர்வதேச மட்டத்தில் நன்மதிப்பு இருந்தாலும், தற்பொழுது அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றார்கள். குறிப்பாக தொழில்மயப்படுத்தப்பட்ட கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு சிந்தனை தற்பொழுது அனைவர் மத்தியிலும் இருக்கின்றது.
இதுவும் மலையகக் கல்வியின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.
தற்பொழுது கல்வி மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் ஆரம்பித்திருப்பதை பாராட்டியாக வேண்டும். ஆனாலும் இந்த நிலையிலும் நுவரெலியா மாவட்டத்திற்கு அநீதி ஏற்படும் வகையிலேயே இந்த மறுசீரமைப்பு அமைந்துள்ளதாக மலையகத்தில் இருக்கின்ற கல்விமான்களும் கல்வித்துறை சார்ந்தவர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து கல்வி வலயங்கள் இருக்கின்றன. அவை நுவரெலியா, ஹட்டன், கொத்மலை, வலப்பனை, ஹங்குரன்கெத்த ஆகிய கல்வி வலயங்கள் ஆகும்.
இம்மாவட்டத்தில் 45000 மாணவர்களுக்கும் 3000 ஆசிரியர்களுக்கும் ஒரு கல்வி வலயமே காணப்படுகின்றது. இதனால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஆசிரியர்கள் தங்களுடைய சேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. மேலும் அவர்களுக்கு சேவையை பெற்றுக் கொடுப்பதற்கு குறைவான அதிகாரிகளே உள்ளனர்.
கல்வி வலயங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்ற நிதியின் அளவு குறைவாகவே உள்ளது. ஏனெனில் மூன்று கல்வி வலயங்களில் உள்ள 65897 மாணவர்களுக்குக் கிடைக்கின்ற நிதியின் அளவே இரண்டு கல்வி வலயங்களில் இருக்கின்ற 93157 மாணவர்களுக்கும் கிடைக்கின்றது. அத்துடன் 4555 ஆசிரியர்களுக்காக மூன்று வலயங்கள் 6038 ஆசிரியர்களுக்கு சேவையை பெற்றுக் கொடுக்க இரண்டு வலயங்கள். இந்த செயற்பாடானது தமிழ் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிக அளவான தமிழ்மொழி மூல மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்தாலும் ஹட்டன் வலயத்தில் மாத்திரமே ஒரேயொரு தமிழ் கல்வி வலய பணிப்பாளர் இருக்கின்றார். வலயங்கள் அதிகரிக்கப்பட்டால் தமிழர்களும் வலயக் கல்விப் பணிப்பாளர்களாக வர முடியும். இதன் மூலமாக தமிழ்ப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் அசிரியர்களின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்வதற்குமான ஒரு நிலைமை ஏற்படும்.
தற்பொழுது கிடைத்திருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இன்னும் இரண்டு வலயங்களை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகின்றது. இதனை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகக் குறைந்தது இன்னும் நான்கு புதிய வலயங்கள் உருவாக்கப்பட்டு நுவரெலியா மாவட்டத்தில் 9 வலயக் கல்வி பணிமனைகளாவது உருவாக்கப்பட்டால் மாத்திரமே தமிழ்ப் பாடசாலைகளும் ஆசிரியர்களும் வலயக் கல்விப் பணிமனையின் ஊடாக பெற்றுக் கொள்கின்ற சேவைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மலையகத்தின் கல்விமான்களும் புத்திஜீவிகளும் எதிர்பார்க்கின்றார்கள். கடந்த காலத்தில் கல்வி விடயங்களில் மலையக தமிழ் அரசியல் தலைமைகள் இணைந்து செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே முன்வைக்கப்படுகின்றது. அதில் உண்மையும் இருக்கின்றது.
தலவாக்கலையிலும் நோர்வூட் பகுதியிலும் இரண்டு வலயங்களை உருவாக்குவதற்காக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இரண்டு அல்ல ஒரு வலயமே போதுமானது என்ற கருத்தும் பெரும்பான்மை அதிகாரிகள் மத்தியில் நிலவுகின்றது.
எனவே இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து கருத்துகளைத் தெரிவித்தனர். இது தொடர்பாக தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
இலங்கையின் கல்வி வரலாற்றில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்பொழுது கல்வி மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய கணனிமயப்படுத்தலுக்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நுவரெலியா நிருபர் – தியாகு
