கார்த்தியின் கைதி 2 படத்துக்கு நீதிமன்றம் தடை

நடிகர் கார்த்தியின் கைதி 2 படத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற கார்த்தியின் கைதி படத்தின் கதை தன்னுடையது என கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதிமன்றம் இத்தடையை விதித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், கைதி படத்தின் 2ஆம் பாகத்திற்கும் ரீமேக் செய்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ராஜீவ் ரஞ்சன் என்பவர் தான் எழுதிய கதையை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் கூறியதாகவும் கதை பிடித்திருந்ததால், இக்கதையை படமாக்க எஸ்.ஆர்.பிரபு ஒப்புதல் வழங்கியதோடு அதற்கான முன் தொகையாக ரூ.10 ஆயிரத்தை தன்னிடம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் கைதி படத்தை அண்மையில் ஊரடங்கில் பார்த்தபோது தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தான் சொன்ன கதையின் இரண்டாம் பகுதியை எடுத்துக்கொண்டு கைதி முழு படத்தையும் அவர்கள் உருவாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தனக்கு நஷ்ட ஈடாக 4 கோடி ரூபாயை தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு வழங்க வேண்டுமெனவும், கேரள மாநிலம் கொல்லம் நீதிமன்றத்தில் ராஜீவ் ரஞ்சன் புகார் அளித்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு கைதி படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் தடை விதித்துள்ளது.

Related Articles

Latest Articles