” எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நான் வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர் பதவி உட்பட இ.தொ.கா. வில் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளத் தயாராகவே இருக்கீன்றேன்.”

இவ்வாறு கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
கொட்டகலை பிரதே சபையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி சம்பந்தமாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. கடைத் தொகுதிகள் அரசாங்க நிதியையோ மாகாண சபை, பிரதேச சபை நிதியையோ கொண்டு கட்டப்பட்டதல்ல. இது பிரதேச சபை நிதிக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டு அட்டன் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த இடத்தை பிரதேச சபைக்குப் பெற்றுத் தருமாறு பிரதேச செயலாளருக்கும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கொட்டகலை பிரதேச சபை கடந்த 4 ½ வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வந்துள்ளது. மத்திய மாகாணத்தில் சிறந்த சபையாக அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த சபையின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் நான் செயற்பட்டது கிடையாது. சபைக்கு அவப்பெயர் ஏற்பட இடம் கொடுக்கவும் மாட்டேன்.
பிரதேச சபைத் தலைவர் என்ற ரீதியில் இலஞ்ச ஊழலில் சிக்கியிருந்தால், அது கணக்குப் பரிசோதனை ஊடாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் பிரதேச சபைத் தலைவர் பதவியிலிருந்தும் இ.தொ.கா.வில் நான் வகிக்கும் சகல பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன். மக்கள் செல்வாக்கோடு பெரும்பான்மை வாக்குகளால் நிச்சயம் வெற்றி பெறுவேன்.” என்றார்.
க.கிஷாந்தன்










