பெரும்போகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்டுள்ள வயல்காணிகள் மீள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக 430 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க எதிர்வரும் பெரும் போகத்தில் நாடளாவிய ரீதியில் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையிலுள்ள 12,500 ஏக்கர் வயற்காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் பயிர்ச்செய்கைகளை ஆரம்பிக்க முடிந்த எனினும் 5 வருடங்களுக்கு மேல் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாமல் கைவிடப்பட்டுள்ள 47 ஆயிரம் ஏக்கர் வயல்காணிகள் நாட்டில் காணப்படுகின்றன.
அத்துடன் அவ்வாறு கைவிடப்பட்டுள்ள மேலும் 50 ஏக்கர் வயல்கள் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதனை கவனத்தில் கொண்டு வருடா வருடம் அரசாங்கத்தின் நிதியை உபயோகித்து 47 ஆயிரம் ஏக்கர் வயல் காணிகளை மீள பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இவ்வாறான கைவிடப்பட்ட வயல்களை மீள உபயோகிக்கும் போது அதற்கான பொறுப்பை வேலைவாய்ப்பில்லாத இளைஞர் சமூகத்துக்கு ஒப்படைக்கவும் அவர்கள் தாம் விரும்பிய பயிர்களை நடுவதற்கு அவர்களுக்கு தேவையான தொழிநுட்பம், நிதி, விதைகள் உள்ளிட்ட வசதிகளை கமத்தொழில் அபிவிருத்தித் திணைக்களம் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.










