கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான ஜொங்-மூன் சோய் (Jong-Moon Choi), நேற்று (24) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
விரைவில் நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் (ICAPP) கலந்துகொள்ளுமாறு சஜித் பிரேமதாசவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுப்பதே தூதுவர் சோயின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
ஆசியா முழுவதும் அரசியல் கலந்துரையாடல்கள், நாடாளுமன்ற ஈடுபாடுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்த சர்வதேச மாநாட்டின் பங்களிப்பை தூதுவர் சோய் இங்கு வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, இரு தலைவர்களும் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், உணவு மற்றும் வலுசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் நிலையான அபிவிருத்தி உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
பொதுவான சவால்களை வெல்வதற்காக ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினர்.
காலநிலை மற்றும் வானிலை சார்ந்த அபாயங்களை எதிர்கொள்ளுதல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாத்தல், அனர்த்த தயார்நிலையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான அதேநேரம் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
பிராந்தியம் முழுவதும் பொதுக் கொள்கை, கண்டுபிடிப்புகள், தொழில்முனைவோர் மற்றும் தலைமைத்துவத்தில் இளைஞர்கள் அதிக பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் மேலும் வலியுறுத்தினர்.
