சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி குடும்பஸ்தர் பலி – அக்கரப்பத்தனையில் சோகம்!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹன்போல்ட் தோட்ட பிரிவான கிலனிகல்ஸ் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் (28.02.2024) இன்று அதிகாலை பலியாகியுள்ளார்.

மதுரைவீரன் நாகராஜ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு விலங்குகளிடம் இருந்து விவசாய பயிர்செய்கையை பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கியே இவர் உயிரிழந்துள்ளார் என ஆரம்பட்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தரின் , பக்கத்து வீட்டு காரர் பராமரித்து வரும் விவசாய காணிக்கு சட்ட விரோதமாக மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் சம்பவ இடத்தில் இருக்கின்றது, சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து பார்வையிட்டு மரண விசாரணை செய்த பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ், கௌசல்யா

Related Articles

Latest Articles