சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திய கும்பல்: கம்பளையில் பயங்கரம்!

ஆட்டோ சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு, ஆட்டோவை கடத்திச்சென்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பகுதியிலேயே நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கம்பளை நகரில் இருந்து அம்புலாவ பகுதிக்கு செல்ல வேண்டும் எனக்கூறி இரு நபர்கள், வாடகை ஆட்டோவொன்றில் ஏறியுள்ளனர்.

ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருக்கையில், அம்புலாவ, கல்பங்கலாவ பகுதியில் வைத்து, ஆட்டோ சாரதியின் ஜெக்கட்டை எடுத்து அவரின் கழுத்தை நெறித்து அவரை அடித்து காட்டு பகுதியில் தள்ளிவிட்டு , ஆட்டோவை கடத்தியுள்ளனர்.

வேகமாக ஆட்டோவை ஓட்டிச்செல்கையில், எம்மாத்தகம பகுதியில் இருந்து அம்புலாவ பகுதிக்கு வந்த காரொன்றுடன் மோதி ஆட்டோ விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தையடுத்து ஆட்டோவைக் கடத்திய இருவரும், காட்டுக்கு பாய்ந்து தலைமறைவாகியுள்ளனர்.

விடயம் பிரதேச மக்களுக்கு தெரியவர, இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுப்பட்டு இரு சந்தேக நபர்களை பிடித்து பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளனர்.

23 மற்றும் 25 வயதுகளுடைய இரு சந்தேக நபர்களும் கம்பளை, எக்கால்ல பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles