சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம் – அவசர கூட்டத்துக்கு மைத்திரி அழைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆண்டு விழாவை எங்கு நடத்துவது என்பது தொடர்பில் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினையை தீர்ப்பதற்காக கட்சி தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

அரசுடன் இணைந்து செயற்படும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் ஆண்டுவிழாவை எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி குருணாகலையில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர உள்ளிட்டவர்கள் மேற்கொண்டிருந்தனர்.

எனினும், ஆளுங்கட்சி பக்கம் உள்ள சுதந்திரக்கட்சியின் கொழும்பில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கு கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் அனுமதி வழங்கியுள்ளார் எனக் கூறப்பட்டது.

கொழும்பில் மாநாடு நடைபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ஷான் விஜயலால் டி சில்வா, துஷ்யமந்த உள்ளிட்டவர்கள் மாநாட்டை புறக்கணிக்ககூடும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தயாசிறி அணியை மைத்திரி நேற்று பேச்சுக்கு அழைத்திருந்தார். எனினும், அதில் எவரும் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே பொதுவான சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles