சுதந்திரம் எங்கே? என்ற தொனிப் பொருளில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய 24 மணி நேர சத்தியாகிக்கரகத்தின் மீது பொலிசார் நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சமூக ஊடக ஆர்வலர்களின் கூட்டு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி, அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இந்நாட்டு குடிமக்களின் மறுக்க முடியாத உரிமையைப் பறித்து சத்தியாக்கிரகத்தை காடையர்களைக் கொண்டு கலைப்பது, அரசின் கோழைத்தனமான செயல் என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாட்டிற்கும், அதன் குடிமக்களுக்கும் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மிகவும் கடினமான சூழ்நிலையில் மில்லியன் கணக்கான பணத்தை செலவிட்டு, சுதந்திர தின நிழாவை நடத்தக்கூடாது என்பதை இவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இவ்வாறான முட்டாள்தனமான முடிவை எதிர்த்து பொது மக்கள் அமைதியான சத்தியாக்கிரகத்தை நடத்தும்போது, மோதலுக்கான காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் விசுவாசமான கும்பல்களை அனுப்பி, மோதல்களை உருவாக்குவது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு விடயமாகும். சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நீர், கண்ணீர்ப் புகை கொண்டு தாக்குதல் நடத்தி கலைத்து, அவர்களில் சிலரை கைதுசெய்திருக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், அரசாங்கமும். இவ்வாறு மக்கள் மீது அழுத்தங்களையும், அடக்குமுறைகளையும் பிரயோகிக்குமானால் மக்கள் மீண்டும் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம்.” என்று சமூக ஊடக ஆர்வலர்களின் கூட்டு, அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.










