ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உத்தேச புதிய கொழும்பு பாரிய நகர திட்டத்தின் கீழ் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதேவேளை தற்போதைய ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் அலரி மாளிகை ஆகியவற்றை சுற்றுலாத் தலங்களாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் இந்த நிர்வாக வளாகத்தை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான காணியை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
காணிகள் இனங் காணப்பட்ட பின்னர் மேற்படி கட்டடங்களை கட்டம் கட்டமாக அங்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு நகரிலுள்ள ஏனைய பல கட்டடங்களும் முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க வெளிவிவகார அமைச்சு கட்டடம், பொலிஸ் தலைமையகம், தபால் தலைமையகம், விமானப் படை தலைமையகம், கடற்படை தலைமையகம், நீர்ப்பாசன திணைக்கள கட்டடம், வெளிக்கடை சிறைச்சாலை மற்றும் பழைய பாதுகாப்பு அமைச்சு கட்டிடம் உள்ளிட்ட பல கட்டடங்கள் இவ்வாறு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரிச்சலுகை விதிமுறைகளுடன் மேற்படி கட்டடங்களை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதற்கு ஸஅவர் குறிப்பிட்டுள்ளார்.
