ஜனாதிபதி – மொட்டு கட்சி உறவில் விரிசல்! நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட தலைவர்கள்!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ‘அரசியல் போர்’ மூண்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்திருந்தார். ஜனாதிபதி செயலகம் ஊடாக இதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் அரசுக்கான பெரும்பான்மை பலம், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு உள்ளிட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடவே நேற்றிரவு இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பங்கேற்றிருந்தாலும் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சிலர் மொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்களாக செயற்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களை அழைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தாலும், மாவட்ட தலைவர்களை அழைப்பதாக இருந்தால் கட்சிக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என மொட்டு கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், அந்த கோரிக்கை ஜனாதிபதி தரப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மொட்டு கட்சிக்கு தெரியப்படுத்தப்படாமல் மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தாலேயே, மேற்படி சந்திப்பில் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ககூடாது என பஸில் ராஜபக்சவிடம் இருந்து உத்தரவு பறந்துள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சிக்குள் இரட்டை நிலைப்பாடு காணப்படுகின்றது. ஒரு தரப்பு ரணில் பக்கமும், மற்றைய தரப்பு மாறுபட்ட நிலைப்பாட்டிலும் உள்ளது.

நேற்றைய சந்திப்பின்போது ஒளி – ஒலிபரப்புச் சட்டம், பொருளாதார திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles