நடைமுறையிலுள்ள மின்கட்டணம் ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.
மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியன ஒன்றிணைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்த அவர், எதிர்வரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 27/2 இன் கீழ், எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:
2023 ஜனவரி முதலாம் திகதி முதல் நட்டமடையும் அரச நிறுவனங்களுக்காக நிதி ஒதுக்க முடியாதென திறைசேரி சகல அரச நிறுவனங்களுக்கும் உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததையடுத்தே, மின்சார சபை மின்கட்டணத்தை அதிகரிக்கும் பரிர்ந்துரையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு முன்வைத்தது. அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த ஆணைக் குழுவின் தலைவர் மின்கட்டண அதிகரிப்புக்கு இடமளிக்கவில்லை.
பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தமது தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களினால் மின்சார சபைக்கும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகளைத் தோற்றுவித்தார்.
நாட்டின் மின் உற்பத்தி தொடர்பில் கூறுவதானால் இந்த வருடத்தில் 16,520 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
நீர்மின் உற்பத்தி மூலம் 27 வீத மின்சாரத்தையும் அரசாங்கத்தின் மின் உற்பத்தி நிலையங்களூடாக 13 வீத மின்சாரத்தையும் நிலக்கரியூடாக 28 வீதம், காற்றாலையூடாக 02 வீதம் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தியினால் 13 வீதமான மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்து.
நூறு வீதத்திற்கு மேல் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுவது அடிப்படையற்றதாகும். வீட்டு மின்பாவனைக்கான மின்கட்டணம் 87 வீதத்தாலும்,மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின்கட்டணம் 67 வீதத்தாலும்,பொது சேவைகளுக்கான மின்கட்டணம் 55 வீதத்தாலும்,அரச நிறுவனங்களுக்கான மின்கட்டணம் 62 வீதத்தாலும், கைத்தொழில் துறைகளுக்கான மின்கட்டணம் 35 வீதத்தாலும்,ஹோட்டல் சேவைத்துறைக்கான மின்கட்டணம் 66 வீதத்தாலும், விவசாயத்துறைக்கான மின்கட்டணம் 49 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பது போல் 30 முதல் 90 வரையான அலகு மின்சாரத்தை உபயோகிக்கும் பாவனையாளர்களுக்கான மின்கட்டணம் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கப்படவில்லை. 30 முதல் 90 வரையான மின் அலகுகளை பாவிக்கும் பாவனையாளர்கள் எவரும் நாட்டில் கிடையாது.
மின்சார சபை எதிர்கொண்டு வரும் நட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என்ற காரணத்தினாலேயே மின் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டில் 287 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது
மின்சார சபை கடந்த 2018 ஆம் ஆண்டு 30.3 பில்லியன் ரூபா,2019 ஆம் ஆண்டு 97.3 பில்லியன் ரூபா ,2020 ஆம் ஆண்டு 60.4 பில்லியன் ரூபா,2021 ஆம் ஆண்டு 21.5 பில்லியன் ரூபா,2022 ஆம் ஆண்டு 166.2 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளது இந்த நிலை தொடர முடியாது. கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள நட்டத்தை நிவர்த்தி செய்வதற்கு அன்றி எதிர்காலத்தில் நட்டம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலேயே மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
